Tuesday 31 July, 2007

மனிதனை ஆளும் இயந்திரங்கள்...

ப்ரிஸ்க்ரிப்ஷன் ச்சீ... டிஸ்க்ரிப்ஷன்: இது ஒன்னும் சயின்ஸ் ஃபிக்ஷன் கதை கிடையாது. (அதை எழுதுற அளவுக்கு என் மண்டைல மசாலாவும் கிடையாது.)

நான் இரண்டாம் வருடம் தொழிற்கல்வி படிச்சிட்டிருந்த சமயம், காலேஜை கட் அடிச்சிட்டு வீட்டுல தூங்கிட்டு இருந்தேன்.

அன்னிக்கு என்ன கிழமைன்னெல்லாம் ஞாபகம் வரல.


11 மணி இருக்கும்.


காலாங் காத்தால எங்க வீட்டு ஃபோன் என்னியவே எழுப்புற அளவுக்கு காட்டு கத்து கத்துச்சு. எங்க அம்மா எட்டி உதைச்சாக் கூட எந்திரிக்க மாட்டேன். அந்த ஃபோன் சத்தம் இந்த தூங்கிட்டு இருந்த சிங்கத்த எழுப்பிருச்சின்றத வச்சே, அத ரொம்ப நேரமா யாரும் சீண்டலன்றது தெரிஞ்சுடுச்சு. அப்பதான் வீட்டுல யாரும் இல்லன்றதும் தெரிஞ்சது. என்னை விட்டா அந்த ஃபோனுக்கு யாரும் ஆதரவு தர மாட்டாங்கன்றதால, நானே எழுந்து போய், டெலிபோனுக்கு கை கொடுக்க வேண்டியதாகிடுச்சு.

கிரஹாம்பெல்ல திட்டிக்கிட்டே ரிசீவரை காதுக்கு கொடுத்தேன்.
"ஹலோ"

"செந்தில் நாந்தாண்டா"

"சொல்லுங்க மாமா (இவருக்கு வேற வேலையே இல்லடா. ஏந்தான் லீவ் போட்டதை இவர்ட்ட சொன்னேனோ)"

"டேய் உடனே வீட்டுக்கு கெளம்பி வாடா"

"ஏன் மாம காலான்காத்தால தொல்லை பண்றீங்க?"

"டேய் நான் நோட் புக் வாஙியிருக்கேன்டா"

"தோடா நான் ஸ்கூல்ல படிக்கும் போதெல்லாம் மாமா நோட்டு வாங்கித்தா தாம்பேன். அப்பெல்லாம் சும்மா இருந்தீங்க. இப்போ நான் காலேஜ் போரேன் மாமா, நோட்டு புக் எல்லாம் எடுத்துட்டு போனா அஜிங்கம் தெரியுமா?"

"டேய் கொய்யாத் தலையா உங்கம்மா இங்கேதான் இருக்காங்க. மொபைல அவங்க கிட்ட தரவா?"

"ஐய்ய இந்தம்மாக்கு வேற வேலையே இல்ல. மார்க்கெட்டுக்கு போனோமா
வீடு வந்தோம்மான்னு இல்லாம உங்க வீட்டுல வந்து நை நைன்னு."

"நான் சொன்னது லினோவா நோடுபுக்டா"

"இதையெல்லாம் தெளிவா சொல்றதில்லையா. ஆமா அதுல என்ன தெரியும்னு நீங்க வாஙியிருக்கீங்க?."

"டேய் DVD ரைட்டரோட வாங்கியிருக்கேன்டா."

"அதானே திருட்டு விசிடி 30 ரூபாய்க்கு வாங்கி 30 ப்ரிண்ட் போட்டு தெரு பூரா வாடகைக்கு விடப் போரீங்களா?"

"நீ இப்போ வர்றியா இல்லையா?"

"ம்ஹூம் 10 நிமிஷம்".

கம்ப்யூட்டர்ல நான் ஒன்னும் பெரிய ஆள் இல்லைன்னாலும், அவருக்கு எதுவும் தெரியாதுன்றதால என்னிய கூப்பிட்டாரு. 10-வது நிமிஷம் அங்க அட்டன்டன்ஸ் போட்டேன். பார்த்தா மனுஷன் நிறைய தமிழுக்கு டப் பண்ண இங்க்லிஷ் படம்லாம் வச்சிருந்தாரு. அதுலேர்ந்து, ஐ, ரோபோட் படம் (என் செலெக்ஷந்தான்) பார்த்தோம். மார்க்கெட்டுக்கு போற எங்கம்மாவும் கட் அடிச்சிட்டு பார்த்தாங்க...

பாதி படத்துலயே எங்கம்மா, "இது என்ன நல்ல கதியா இருக்குதே, மெஷின் எங்கனா யோசிக்குமா?"ன்னாங்க.

"அப்படி இருந்தா என்ன ஆகும்ன்ற கற்பனைதான் இதும்மா"

மணி 12 தொடுற நேரத்துல இருந்தது.

"உன்னிய மாதிரி வேலை வெட்டி இல்லாதவந்தான் இதையெல்லாம் பார்த்து நம்புவான்."

(ஆமா, மோகினி பிசாசு பழி வாங்க வந்ததுன்னா நம்புவீங்க. ப்ளேடு வாங்க காசில்லாம தாடி வச்சவன் வாந்தி எடுக்குற வாயில லிங்கத்த ஒளிச்சு வச்சி எடுத்தா நம்புவீங்க. இதை கற்பனைன்னு சொல்லியே ஒருத்தன் உழைச்சு காசு போட்டு படம் எடுத்தா நம்ப மாட்டீங்க. அவங்க சொல்றதும் சரிதான் மெஷினாவது யோசிக்கிறதாவது. மனுஷனை ஆளுறதாவது, ஓவராத்தான் இருக்குது. ன்னு நினைச்சிட்டு இருக்கும்போதே)

இதையெல்லாம் நீயே பாரு நான் மார்கெட்டுக்கு போகணும்னு சொல்லிக்கிட்டெ கடிகாரத்தை பார்த்தவங்க, "ஐயையோ மணி 12 ஆகிடுச்சு, _________ போட்டிருவானே. இந்த நாயால 11.30 மணி நாடகத்த விட்டுட்டேனே."ன்னு அன்னிக்கு பிரபலமா இருந்த ஒரு சீரியல் பேரை சொல்லிக்கிட்டே எங்க மாமா வீட்டு டி.வியை போட ஓடினாங்க. கூடவே எங்க மாமாவோட அம்மாவும் சமையல் கட்டுலேர்ந்து கடாயை தீய போட்டுட்டு எட்டி எட்டி பார்த்துட்டு இருந்தாங்க. காய்கறி வாங்க எடுத்துட்டு வரப்பட்ட கூடை காலியாத்தான் இருந்தது அன்னிக்கு 1.30 மணி வரைக்கும்.

யோசிக்கத் தெரியாத டி.வி எங்க வீட்டு பெண்களையே ஆள்றதை வெரிச்சு பார்த்துட்டு இருந்தேன் நான்.

Thursday 26 July, 2007

எட்டு

சின்ன வேலைன்னு சொல்லிட்டு, இந்தா பெருசா எட்டு போட்றான்னு சொல்லி ஆட்டம் காட்டுறாங்க பாட்டி. நான் பாட்டுக்கு பார்வதியேன்னு ஒரு ஓரமா பதிவு (அதை நாந்தான் படிக்கிறேன்) போட்டுக்கிட்டு இருக்கேன். என்னையும் "8" போடுற அளவுக்கு பெரிய ஆள்னு நெனைச்சிட்டு இருக்காங்க, பாவம் பாட்டி. அவங்க பெரிய மனசுக்கு ஒரு நன்றியச் சொல்லி 8 போடுறேன்.


போடுறதுக்கு முன்னாடி அது என்ன 8ன்னு அவங்கப் பதிவ ஒரு எட்டு போய் பார்த்தா, நம்ம கிட்ட இருக்குற பெருமைப் படக் கூடிய "8" விஷயங்களை எழுதுமாம். இது ஆவுரதில்லன்னு அங்கனயே ஒரு லேட் என்ட்ரி பின்னூட்டத்தப் போட்டுட்டு இந்த 20 நாளா யோசிக்க ஆரம்பிச்சேன்.
நானும் தலகீழ நின்னும் யோசிச்சேன். ரூம் போட்டு யொசிச்சேன், குப்புற படுத்து யோசிச்சேன். ம்ஹூம். என்ன ஒரு அநியாயம் ஒன்னு கூட கிடைக்கல. அதனால என்கிட்ட இருக்க எனக்கு தெரிஞ்ச '8'ஐ போடுறேன் தப்பா எடுத்துக்காதீங்க...



1. இப்ப வர்ற தமிழ் படங்கள்ல, கொலை நகரமா காட்டப் படுகிற தமிழ் நாட்டின் தலை நகரத்துல தான் எங்க அம்மா எனக்கு பிறப்பை கொடுத்தாங்க. ஹேய். ஹேய். ஹேய். ஹேய். இப்படி காட்டு கத்துக்கு நடுவுல அமைதியாப் பிறந்தவன் இந்த அபூர்வ சிகாமணி.


2. ஒருத்தன் உதவியே கேட்கலைன்னாலும், ரஜினி சார் மாதிரி ச்சும்மா பாய்ஞ்சி பாய்ஞ்சி உதவி செய்வேன். இதனால எப்பவுமே சிக்கல்ல மாட்டிக்கிட்டாலும், இது நான் ரொம்ப பெருமைப் பட்டுக்கிற விஷயம்.


3. எனக்கு பைக் ஓட்டத் தெரியாது. இதுல என்னடா பெருமைங்கறீங்களா?, என்னால ஓசோன்ல விழ வேண்டிய ஓட்டை கொஞ்சம் லேட்டா விழுதே... (பெருமைப் பட எதுவும் கெடைக்கலைன்னா இப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு)



4. என் பாஸுக்கு கீழ வேலை பார்க்கிறது. ரொம்ப நல்லவரு, வேலைக்கு எந்த ட்ரெஸ்ல வேணா வா. உன் வேலைய "மட்டும்" கரெக்டா பண்ணிட்டா போதும்பாரு. "ஓவர் டைம்" பாக்கிறவங்களை பிடிக்காது. "வேலையை மிச்சம் வக்கிறவந்தான் அத ஓவர் டைம் பார்த்து சரி செய்வான்"ன்னு சொல்வாரு. வேலைக்கு லேட்டா வரலாம். சீக்கிரமா வீட்டுக்கு "S" ஆகிடலாம். இப்ப சொல்லுங்க அவரு நல்லவருதானே? இந்த மாதிரி பாஸ் கிடைச்சதுக்கு நான் ரொம்ப பெருமை படறேன்.


5. எல்லாரும் தன்கிட்ட பெருமைப் பட இருக்குறதை எழுதிருந்தாங்க... நான் இதெல்லாம் இல்லாததால பெருமை படறேன்.எனக்கு தம் அடிக்கிற பழக்கம் கிடையாது. தண்ணி, பம்பு செட்டுல கூட அடிக்க மாட்டேன். வாயில விரல் வச்சாக் கூட கடிக்கத் தெரியாது. (விரலை உங்க வாயில வச்சா ). இது நான் ரொம்ப பெருமை பட்டுக்கிற விஷயம்.
ஆனா, எப்பமாச்சும், ஃப்ரெண்ட்ஸ் கூட அவங்களுக்கு கம்பெனி கொடுக்க பாருக்கு போறதுண்டு. அங்க அவிங்களுக்கு வைக்கிற ஸைட் டிஷ்-அ மட்டும் வீடு கட்டி சாப்பிடுவேன். சர்வரை அடிக்கடி கூப்பிட்டு தம்ஸ்-அப் கொண்டு வா, சிப்ஸ் கொண்டு வான்னு அவன் மேல ஏறுவேன். பார்க்குறவன்கள்லா என்னமோ எங்க பத்து பேர் குரூப்ல பாதி சரக்க நானே ஆட்டையப் போட்டா மாதிரி பார்ப்பாங்க. கொலை வெறியோட தம்ஸ்-அப் குடிக்கிறவன் நான். நான் போன வாரம் ஃப்ரெண்டு ஒருத்தன் கொடுத்த ட்ரீட்-ல கொடுத்த சவுண்ட். "ஸைட் டிஷ் ஜரா ஜல்தி லேக்கர் ஆவ். ஸைட் டிஷ்க்கே பினா மே தம்ஸ்-அப் நஹி பித்தா."

6. சிம்பிளா இருக்குறது. நம்ம சிம்ப்ளி சி.வி.ஆர் மாதிரி, நம்மள சிம்ப்ளி செந்தில்ன்னு சொல்லலாம். எனக்கு எந்த ஒரு வேலை செய்தாலும், சிம்பிளா செய்துக்குவேன். இதுவே மத்தவங்களுக்குன்னா ரொம்ப பிரம்மாண்டமா இருக்கும். நான் ஏன் அப்படி செய்யிரேன்னு எனக்கே தெரியாது, அது அப்படியே பழக்கம் ஆகிடுச்சு.

7. கடவுள் எனக்கு பக்க பலமா இருக்குற மாதிரியான ஒரு நினைப்பு. ஏன்னா எனக்கு "ஒரு பெரிய பாதிப்பைத் தரும்"னு என் கூட இருக்குறவங்க சொன்ன பிரச்சினை எல்லாமே புஸ் ஆன ராக்கெட் மாதிரி ஆகியிருக்கு. என்னை "வேண்டாம் நம்ம பழக்கத்தை இன்னியோட விட்டுரலாம்"னு சொன்னவங்க எல்லாம், மறு நாள் காலையில சந்திக்குறப்பவே பழைய மாதிரி சந்திச்சிருக்காங்க. இதுல சொல்லப் போற முக்கியமான விஷயம், எனக்கு கடவுள் மேல நம்பிக்கை கிடையாது. இதனால எனக்குள்ளயே ஒரு கர்வம் இருக்கு. "ஒனக்கு ஒண்ணும் ஆகாதுடா துணிஞ்சு போடா"ன்னு ஒரு உந்து சக்தி. அதனால, எந்த வேலையா இருந்தாலும் துணிஞ்சு செய்யிறது, யார் கூட பேசும்போதும் சரி, மனசுல இருக்குறத அப்படியே சொல்லிடுவேன். எனக்குள் இருக்குற என்னால புரிஞ்சுக்க முடியாத ஒரு விஷயம் இது. கடந்த 2 வருஷமாத்தான் அதை நான் புரிஞ்சுக்கிட்டு வர்றேன். பாட்டிம்மா அதுக்கு ஒரு விளக்கம் சொன்னா நல்லாருக்கும்...

8. ரெளத்ரம் பேசுறது. இதைப் பத்தி இங்கே எழுதுறதை விட ஒரு பதிவாப் போட்டுடலாம்னு இருக்கேன். அதனால போட்ட பிறகு படிச்சுக்குங்க....

1. தம்பி

2. அரைபிளேடு

3. ஜொள்ஸ்

4. வான் மழை செந்தில்

5. நடைவண்டி ஆழியூரான்.

6. ஸ்யாம்

இதுக்கு மேல என்னால தேடி கண்டு பிடிக்க முடியலடா சாமி. நானே கடைசியா வந்ததால எல்லாருமே போட்டிருப்பாங்க...

இதோட முடிச்சுக்குவோம். யாராவது போடிலின்னா என் பேரைச் சொல்லி போட்டிருங்க. நாந்தான் ரெகமன்ட் பண்ணதா சொல்லிக்குரேன்.


காபி & பேஸ்ட் (இல்ல நான் பேஸ்ட் வச்சி ப்ரஷ் பண்ணிட்டு அப்புறம்தான் காபி குடிப்பேன்)..

விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.


2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.


3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்...