நான் இரண்டாம் வருடம் தொழிற்கல்வி படிச்சிட்டிருந்த சமயம், காலேஜை கட் அடிச்சிட்டு வீட்டுல தூங்கிட்டு இருந்தேன்.
அன்னிக்கு என்ன கிழமைன்னெல்லாம் ஞாபகம் வரல.
11 மணி இருக்கும்.
காலாங் காத்தால எங்க வீட்டு ஃபோன் என்னியவே எழுப்புற அளவுக்கு காட்டு கத்து கத்துச்சு. எங்க அம்மா எட்டி உதைச்சாக் கூட எந்திரிக்க மாட்டேன். அந்த ஃபோன் சத்தம் இந்த தூங்கிட்டு இருந்த சிங்கத்த எழுப்பிருச்சின்றத வச்சே, அத ரொம்ப நேரமா யாரும் சீண்டலன்றது தெரிஞ்சுடுச்சு. அப்பதான் வீட்டுல யாரும் இல்லன்றதும் தெரிஞ்சது. என்னை விட்டா அந்த ஃபோனுக்கு யாரும் ஆதரவு தர மாட்டாங்கன்றதால, நானே எழுந்து போய், டெலிபோனுக்கு கை கொடுக்க வேண்டியதாகிடுச்சு.
கிரஹாம்பெல்ல திட்டிக்கிட்டே ரிசீவரை காதுக்கு கொடுத்தேன்.
"ஹலோ"
"செந்தில் நாந்தாண்டா"
"சொல்லுங்க மாமா (இவருக்கு வேற வேலையே இல்லடா. ஏந்தான் லீவ் போட்டதை இவர்ட்ட சொன்னேனோ)"
"டேய் உடனே வீட்டுக்கு கெளம்பி வாடா"
"ஏன் மாம காலான்காத்தால தொல்லை பண்றீங்க?"
"டேய் நான் நோட் புக் வாஙியிருக்கேன்டா"
"தோடா நான் ஸ்கூல்ல படிக்கும் போதெல்லாம் மாமா நோட்டு வாங்கித்தா தாம்பேன். அப்பெல்லாம் சும்மா இருந்தீங்க. இப்போ நான் காலேஜ் போரேன் மாமா, நோட்டு புக் எல்லாம் எடுத்துட்டு போனா அஜிங்கம் தெரியுமா?"
"டேய் கொய்யாத் தலையா உங்கம்மா இங்கேதான் இருக்காங்க. மொபைல அவங்க கிட்ட தரவா?"
"ஐய்ய இந்தம்மாக்கு வேற வேலையே இல்ல. மார்க்கெட்டுக்கு போனோமா
வீடு வந்தோம்மான்னு இல்லாம உங்க வீட்டுல வந்து நை நைன்னு."
"நான் சொன்னது லினோவா நோடுபுக்டா"
"இதையெல்லாம் தெளிவா சொல்றதில்லையா. ஆமா அதுல என்ன தெரியும்னு நீங்க வாஙியிருக்கீங்க?."
"டேய் DVD ரைட்டரோட வாங்கியிருக்கேன்டா."
"அதானே திருட்டு விசிடி 30 ரூபாய்க்கு வாங்கி 30 ப்ரிண்ட் போட்டு தெரு பூரா வாடகைக்கு விடப் போரீங்களா?"
"நீ இப்போ வர்றியா இல்லையா?"
"ம்ஹூம் 10 நிமிஷம்".
கம்ப்யூட்டர்ல நான் ஒன்னும் பெரிய ஆள் இல்லைன்னாலும், அவருக்கு எதுவும் தெரியாதுன்றதால என்னிய கூப்பிட்டாரு. 10-வது நிமிஷம் அங்க அட்டன்டன்ஸ் போட்டேன். பார்த்தா மனுஷன் நிறைய தமிழுக்கு டப் பண்ண இங்க்லிஷ் படம்லாம் வச்சிருந்தாரு. அதுலேர்ந்து, ஐ, ரோபோட் படம் (என் செலெக்ஷந்தான்) பார்த்தோம். மார்க்கெட்டுக்கு போற எங்கம்மாவும் கட் அடிச்சிட்டு பார்த்தாங்க...
பாதி படத்துலயே எங்கம்மா, "இது என்ன நல்ல கதியா இருக்குதே, மெஷின் எங்கனா யோசிக்குமா?"ன்னாங்க.
"அப்படி இருந்தா என்ன ஆகும்ன்ற கற்பனைதான் இதும்மா"
மணி 12 தொடுற நேரத்துல இருந்தது.
"உன்னிய மாதிரி வேலை வெட்டி இல்லாதவந்தான் இதையெல்லாம் பார்த்து நம்புவான்."
(ஆமா, மோகினி பிசாசு பழி வாங்க வந்ததுன்னா நம்புவீங்க. ப்ளேடு வாங்க காசில்லாம தாடி வச்சவன் வாந்தி எடுக்குற வாயில லிங்கத்த ஒளிச்சு வச்சி எடுத்தா நம்புவீங்க. இதை கற்பனைன்னு சொல்லியே ஒருத்தன் உழைச்சு காசு போட்டு படம் எடுத்தா நம்ப மாட்டீங்க. அவங்க சொல்றதும் சரிதான் மெஷினாவது யோசிக்கிறதாவது. மனுஷனை ஆளுறதாவது, ஓவராத்தான் இருக்குது. ன்னு நினைச்சிட்டு இருக்கும்போதே)
இதையெல்லாம் நீயே பாரு நான் மார்கெட்டுக்கு போகணும்னு சொல்லிக்கிட்டெ கடிகாரத்தை பார்த்தவங்க, "ஐயையோ மணி 12 ஆகிடுச்சு, _________ போட்டிருவானே. இந்த நாயால 11.30 மணி நாடகத்த விட்டுட்டேனே."ன்னு அன்னிக்கு பிரபலமா இருந்த ஒரு சீரியல் பேரை சொல்லிக்கிட்டே எங்க மாமா வீட்டு டி.வியை போட ஓடினாங்க. கூடவே எங்க மாமாவோட அம்மாவும் சமையல் கட்டுலேர்ந்து கடாயை தீய போட்டுட்டு எட்டி எட்டி பார்த்துட்டு இருந்தாங்க. காய்கறி வாங்க எடுத்துட்டு வரப்பட்ட கூடை காலியாத்தான் இருந்தது அன்னிக்கு 1.30 மணி வரைக்கும்.
யோசிக்கத் தெரியாத டி.வி எங்க வீட்டு பெண்களையே ஆள்றதை வெரிச்சு பார்த்துட்டு இருந்தேன் நான்.